About Saint Sebastian's Church
Learn more about our parish, our history, and our mission to serve the community with faith and love.



புனித செபஸ்தியார் ஆலய பங்கு - அண்ணா நகர்
தோற்றம்
தஞ்சாவூர் மறைமாவட்டம் 22 நவம்பர் 1952 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அண்ணாநகர் புனித செபஸ்தியார் ஆலயத்தைத் தலைமையிடமாகக் கொண்டு அதனை சுற்றியுள்ள கத்தோலிக்க மக்களின் ஆன்மீக நலனைக் கருத்தில் ஏற்று இப்புதிய பங்கு 03.12.2000 அன்று ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அவர்களால் நிறுவப்பட்டது. இப்பங்கு, மாபெரும் ஜூபிலி 2000 ஆம் ஆண்டில் தஞ்சை ஆயர் மேதகு ம.தேவதாஸ் அம்புரோஸ் ஆண்டகை அவர்களால் நிறுவப்பட்ட முதல் பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் தென்பகுதியிலிருந்து பர்மாவில் குடியேறி வாழ்ந்து வந்த இந்தியர்கள் திடீரென்று பர்மா அரசு வெளியிட்ட ஆணையின்படி அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த அவல நிலையில் இந்தியாவிற்கு வந்தவர்களை, மறைந்த அருட்தந்தை மோன்சிங்ஞோர் பின்டோ வரவேற்று, தம் அன்பினால் ஈர்த்தார். பர்மாவிலிருந்து அகதிகளாக வந்த இவர்களுக்கு சாதி. மத வேறுபாடின்றி கல்வியிலும், பொருளாதாரத்திலும் வளர்ச்சிபெற ஆவண செய்தார். அவர்களின் ஆன்ம நலனை கருத்தில் கொண்டு புனித செபஸ்தியார் ஆலயத்தைக் கட்டினார். அதன்பிறகு தஞ்சை மறைமாவட்டப் பேராலய பங்குத்தந்தையாக இருந்த அருட்திரு குழந்தைநாதர், அருட்திரு ஆர்.சவரிமுத்து ஆகியோரின் பெரும் முயற்சியால் கூரைக் கோவிலாக இருந்த புனித செபஸ்தியார் ஆலயம் கட்டடமாக எழுப்பப்பட்டது. தஞ்சையின் பங்கு குருக்கள் எடுத்த பெரும் முயற்சியால் இது தற்பொழுது தனிப்பங்காக உயர்த்தப்பட்டு, அருட்திரு. எம்.எ. மெல்கியாஸ் அவர்கள் இதன் முதல் பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்றுச் சிறப்பாக பணியாற்றினார். மக்களின் வசதிக்காக புதிய ஆலயம் கட்ட இடம் வாங்கப்பட்டுக் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டன.
ஆன்மீகப் பணிகள்
இப்பங்கு மக்கள் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்கள், பங்கின் பல்வேறு பணிகளில் பங்குத் தந்தைக்குச் சிறந்த ஒத்துழைப்பு நல்கிவருகின்றனர், அன்பியங்கள் தொடங்கப்பெற்றுச் சிறப்பாக நடைபெறுகின்றன. இப்பங்கிலிருந்து அருட்தந்தை எஸ்.அந்தோணிராஜ், அருட்தந்தை ஏ.சவரிமுத்து, அருட்தந்தை எப்.ஆரோக்கியசாமி, அருட்தந்தை சூசை அருள், அருட்தந்தை ஜோசப் குழந்தைசாமி, அருட்தந்தை ரீகன் ஜெயக்குமார். அருட்தந்தை அலெக்சாண்டர் சுரேஷ் ஆகியோர் குருக்களாகப் பணியாற்றி வருகின்றனர். இளம் பெண்கள் சிலர் பல்வேறு துறவற சபைகளில் அருட்சகோதரிகளாகவும் பணியாற்றுகின்றனர்.
கல்விப் பணிகள்
இப்பங்கில் கிறிஸ்து ராஜா மேல்நிலைப்பள்ளி இயேசுவின் சகோதரிகள் பொறுப்பிலும், மேலும், புனித வளனார் மேல்நிலைப்பள்ளி மற்றும் பான்செக்கர்ஸ் கலைக்கல்லூரி ஆகியவை புனித அடைக்கல அன்னை அருட்சகோதரிகள் பொறுப்பிலும் நடைபெறுகின்றன. இப்பங்கின் மாணவ மாணவியர் மறைமாவட்டத்திலுள்ள இதரப் பள்ளிகளிலும் பயின்று வருகின்றனர்.
பங்கின் கிளை கிராமங்களும், மக்கள் தொகையும் 2000-ல்
தஞ்சை நகர்ப்பகுதி (879), நாஞ்சிக்கோட்டை (66), வஸ்தா சாவடி (179), யாகப்பா சாவடி (44), பதுவன் சாவடி (252), உச்சிமாஞ்சோலை (34), கண்டிதம்பட்டு (121),கரை மீண்டார்கோட்டை (43), வாண்டையார் இருப்பு (56), அருமலைக்கோட்டை (15), மடிகை (28), சுரக்கோட்டை (20). நெல்லுப்பட்டு (10), தில்லை நகர் (114), பாரதிதாசன் நகர் (46). ராஜராஜன் நகர் (363) ஆகியவை பங்கின் கிளைக் கிராமங்கள். மொத்தக் கத்தோலிக்க குடும்பங்கள் 457, மொத்த ஆண்கள் 1119, மொத்தப் பெண்கள் 1151, மொத்தக் கத்தோலிக்கர் 2220.
எங்கள் பாதுகாவலர் : புனித செபஸ்தியார்

அருள் வாழ்வில் நம் முன்னோடிகளான புனிதர்களில் நீட்சியாக, “புனித செபஸ்தியார்” பிரான்ஸ் நாட்டில் நற்போன் நகரில் கி.பி.256-ஆம் ஆண்டு பிறந்து, இத்தாலியில் உள்ள மிலான் நகரில் வளர்ந்தார். புனித வேதகலாபனைகள் அதிகமாக நடந்த நேரத்தில் கிறிஸ்தவர்களின் தேடல் இயேசுவின் அன்பைப் பற்றியே இருந்த நேரத்தில் புனித செபஸ்தியார் “காரினஸ்” படையில் சேர்ந்து வீரதீரத்தால் வெற்றிவாகை சூடி, உரோமை பேரரசன்ப் தியோக்கிளேசியன் மற்றும் அவரது தம்பி மாக்சிமியன் இவர்களின் நம்பிக்கைக்கு உரியவர் ஆனார்.
“நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம், மருள வேண்டாம் நான் உங்களோடு இருக்கிறேன்” என்ற இறை வார்த்தைக்கேற்ப நம்பிக்கையில் நிலைத்து வாழ சிறையில் உள்ள கிறிஸ்தவர்களைத் தேற்றினார். திருத்தொண்டர்களான மார்க்ஸ். மார்சலின் இரு இளைஞர்களும் இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையைப் புதுப்பித்து உயிர்த்துறக்கவும் சிறை அதிகாரி நிக்கோஸ்ட் ரேஷஸ் மனம் மாறி கிறிஸ்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்.
இதன் தொடர்ச்சியாக பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட நகர அதிகாரி குரோமோஷியஸ் உடல் சுகம் பெற அதைக் கண்டு அவன் மகன் டியூர்ஷியஸ் கிறிஸ்தவன் ஆனான். புனித செபஸ்தியார் மறையுரையால் விசுவாசம் கொண்டு இயேசுவின் கரம் பிடித்த பங்கிராசு வேங்கைக்கு இரையானது விசுவாசத்தின் வித்துக்கள் விதைக்கப்பட்ட காலம் எனலாம். கிறிஸ்தவராகிய கோத்திராக வெளியில் தள்ளப்பட்டு இழுத்து கொல்லப்பட்டதும் கொடுங்கோலனின் கொடுமை ஆகும்.
பேராசைக்காரன் புல்வியனால் புனித செபஸ்தியார் கிறிஸ்தவன் எனக் கண்டறியப்பட உரோமை பேரரசன் செபஸ்தியாரிடம் வேதத்தை விட்டு விடும் எனக் கேட்டபோது தான் வணங்கும் தேவன் இயேசுவை உண்மையாக மறுதலிக்க முடியாது எனக் கூற அரசன் ஆணையின்படி புனித செபஸ்தியார் பட்ட மரத்தில் கட்டப்பட்டு அம்புகளால் துளைக்கப்பட்டார். அந்நேரத்தில் பட்ட மரமும் துளிர்த்து ஒளி வீசியது. அம்புகளால் துளைத்துத் தூக்கி எறியப்பட்ட செபஸ்தியாரின் உயிர் இருப்பதை உணர்ந்த இரேனே என்னும் கிறிஸ்தவ அம்மணியின் வீட்டில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவ குருவால் சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் நலம் பெற்று, மன்னனிடம் சென்று “நீ செய்வது தவறு” எனச் சுட்டிக்காட்டினார் புனித செபஸ்தியார். உரோமை பேரரசன் தன்னைச் சுட்டிக்காட்டிய செபஸ்தியாரை மீண்டும் தடியடி கொடுத்துக் கொன்றான். புனித செபஸ்தியார் பங்கராசின் அன்னை லூசினாவின் கனவில் தோன்றி, தன் உடல் இருக்கும் இடத்தைத் தெரிவிக்க அவர் உடலைச் சுரங்கத்தில் அடக்கம் செய்தார். இன்றும் அது புனித செபஸ்தியார் சுரங்கம் என அழைக்கப்படுகிறது.
நமது கிளை பங்குகள்
எங்கள் பங்கு சுற்றுப்புற பகுதிகளில் வாழும் விசுவாசிகளுக்கு சேவை செய்ய நான்கு துணை நிலையங்களையும் மேற்பார்வை செய்கிறது. இந்த துணை நிலையங்கள் எங்கள் ஆன்மீக மற்றும் சமூக சேவைகளின் விரிவை அதிகரித்து, ஒவ்வொரு குடும்பமும் கூடிச் சேர்ந்து, ஜெபித்து, விசுவாசத்தில் வளரக்கூடிய இடம் கிடைப்பதை உறுதி செய்கின்றன.


St.Sebastin Prayer
Pray with us for strength, healing, and peace through St. Sebastin’s intercession.
25th Silver Jubilee Book Launched!
Celebrate our parish’s rich history and spiritual journey. Learn more about our 25th Silver Jubilee book.
Key Highlights
- 🌟 Over 25 years of spiritual service
- 👨👩👧👦 Home to 1000+ families
- ⛪ Daily Mass and Confession
- 🎉 Special feasts and devotions
- 🤝 Community outreach programs
- 🌍 Welcoming pilgrims worldwide
