புனித செபஸ்தியாரிடம் செபம்

நோயுற்ற வேளையில் புனித செபஸ்தியாரிடம் செபம்

    உரோமை அரசினால் துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு ஆறுதலாய் இருக்கவும், மறைசாட்சி முடியைப்பெறவும் போர்ச்சேவகராகிய புனித செபஸ்தியாரே, என்மீது இரக்கமாயிரும், பாவியின் மரணத்தை விரும்பாமல் அவன் குணமடைய வேண்டுமென்று விரும்புகிற இறைவன், பாவிகள் மனந்திரும்பவும், புண்ணிய ஆன்மாக்கள் புனிதமடையவும், வைசூரி, பேதி, பெருவாரிக்காய்ச்சல் முதலிய நோய்களை அனுப்பினாலும் சில சமயங்களில் பாடுபட்டுப் பேறடைந்த புனிதர்களுடைய வேண்டுதலாலே வேதனைப்படுபவர்களுக்கு, அவர்கள் துன்ப நாளில் ஆறுதலைக் கட்டளையிடுகிறார் என்பதை நான் அறிந்துள்ளேன். இந்த நோயால் உமது உதவியைக் கேட்டு மன்றாடுகிறேன். உரோமாபுரியில் உமது பெயரால் பீடம் எழுப்பியபின்தான் நச்சுக் காய்ச்சல் நீங்கியதென்பதையும் நான் அறிவேன்.
    தியோக்கிளேசியன் அரசனுக்கு அஞ்சாத வன்மைமிகு மறைசாட்சியாகிய புனித செபஸ்தியாரே! இந்த வேதனை மிகுந்த நோயில் என்னைக் கைவிடாதேயும். என் பாவங்கள் பொருட்டு வந்த இந்த நோயை நான் பொறுமையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் இறைவன் என்மீது ஒரு பாரத்தைச் சுமத்தியுள்ளார். நானோ மிக பலவீனன். காற்றால் அடிக்கப்பட்ட சருகுபோலும், துரும்புபோலும், தத்தளிக்கிறேன். இறைவன் கோபத்தைத் தாங்க நான் வல்லவன் அல்லவே. இந்தத் துன்பக் கலத்தை நான் 20 பருக வேண்டுமென்பது இறைவன் திருவுளமானால் நான் வீரம் பொருந்திய பொறுமையோடு அதனைக் குடிக்க எனக்காக ஆண்டவரை மன்றாடும். என் கேட்டுக்காக அல்ல, என் நலத்திற்காகவே இறைவன் என்னைத் தண்டிக்கிறார். காயப்படுத்துபவரும் அவரே. குணப்படுத்துபவரும் அவரே. நான் நலமுடன் இருக்கும் பொழுது இறைவனை அன்பு செய்வது போல, துன்ப நாளிலும் அவரை அன்பு செய்வேனாக. நான் இந்த வியாதியில் அலையுண்டு கலங்காதவாறு இந்தக் கசப்பான கலத்தை அவர் திருக்கரங்களிலிருந்து மகிழ்ச்சியோடு வாங்கிப் பருக வேண்டிய தைரியத்தைப் பெற்றுத் தாரும்.
    தாய் தன் பிள்ளையை மறந்தாலும் மக்களை மறக்காத இறைவன், வைசூரி, பேதி, காய்ச்சல் முதலிய நோய்களையும், வறுமை, போர். பஞ்சம் முதலிய பெரிய துன்பங்களையும் அன்பு மிகுதியால்தான் அனுப்புகிறார் என்று அறிந்திருந்தும், ஏன் நான் அவர்மீது முறையிட வேண்டும்? ஆதலால் புனித செபஸ்தியரே, இந்த நோய் விரைவில் குணமாக இறைவனுக்குத் திருவுளமில்லையெனில், அதை நான் நல்ல மனதோடு பொறுத்துக்கொள்ள எனக்குத் தைரியத்தையாகிலும் தந்தருள எனக்காக மன்றாடும். என் பாவங்களின் பரிகாரத்திற்காக இன்னும் மிகுதியான நோய்களும், துன்பங்களும் எனக்கு வர வேண்டும் என்று நான் ஆசிக்க வேண்டியதுதான். புனிதர்களே துன்ப, துரித, நோய்களை ஆசித்திருக்க. பாவியாகிய நான் நித்திய கடலில் வீசப்பட்ட பேற்றினை அடைய நோய், வருத்தங்களை ஆசிக்காமல் இருப்பது முறையா? ஆனால் புனித செபஸ்தியாரே, நான் பலவீனனும் புண்ணிய வாழ்வில் திடனற்றவனாயும் இருப்பதால் தேவரீர் என்மீது இரங்கி இந்தத் துன்பங்களைப் பொறுமையோடு நான் சகித்துக் கொள்ள எனக்காக ஆண்டவரை மன்றாடும். ஆமென்.


புனித செபஸ்தியாரை நோக்கி எழுப்பப்படும் ஏழு மன்றாட்டு

1. பிதாவின் திருவுள்ளத்தினால் உயர்ந்த குடும்பத்தினரான தாய் தகப்பனிடத்திலே பிறந்து, எண்ண இயலாத புண்ணிய நன்மைகளைச் செய்து திருமறைக்காகத் துன்பப்பட்ட கிறிஸ்தவர்களுக்காகப் படையில் பணிபுரிந்தவரான புனித செபஸ்தியாரே, இறைமக்கள் அனைவரையும் எல்லாத் தீமைகளிலிருந்தும் இறைவன் இரட்சித்தருள வேண்டுமென்று இறைவனிடம் நீரே மன்றாட வேண்டுமென்று உம்மைப் பார்த்து வேண்டுகிறோம்.

-பர, அருள், திரி


2. வியப்புக்குரிய ஞானத்தோடும், துணிவோடும் அநேக அரசர்களுக்கும், பிரபுக்களுக்கும் மெய் மறையை அறிக்கையிட்டுப் புத்திமதி சொன்னவரான புனித செபஸ்தியாரே, உலகமெங்கும் பசாசின் வழிபாடு ஒழிந்து எல்லாரும் மெய்மறையை அறிந்து ஞானதீட்சை பெற்றுத் திருச்சபையில் இணைய வேண்டுமென்று நீரே இறைவனை மன்றாடும்படி உம்மை வேண்டுகிறோம்.

-பர, அருள், திரி


3. திருத்தந்தைக்கு மிகவும் பிரியமுள்ள ஆறுதலும், அகமகிழ்ச்சியும் அளித்து உரோமாபுரி முதலிய அரசுகளில் நச்சு நோய் முதலானவைகளை நீக்கினவருமான புனித செபஸ்தியாரே, கிறிஸ்தவர்களுக்குள்ளே பஞ்சம், படை, கொள்ளை நோய் முதலான துன்பங்கள் இல்லாமல் காப்பாற்றி இரட்சித்தருள வேண்டுமென்று நீரே எங்களுக்காக இறைவனை மன்றாடும்படி உம்மை வேண்டுகிறோம்.

-பர, அருள், திரி


4. இறைவனுக்குப் பிரியமாகவும், திருமறைக்காகத் துன்பப்படுகிற விசுவாசிகளுக்கு உதவியாகவும் இருந்து வியாதிக்காரருக்கு இறை உதவியால் ஆரோக்கியம் கொடுத்த புனித செபஸ்தியாரே, கிறிஸ்தவர்களுக்கு விஷபேதி, வாந்தி, வைசூரி போன்ற வியாதியில்லாமல் இறைவன் காத்து இரட்சித்தருள வேண்டுமென்று மன்றாட உம்மை வேண்டுகிறோம்.

-பர, அருள், திரி


5. அனைத்துலகிலும் நற்பெயர் கொண்டவருமாய் திருமறைக்குத் தஞ்சமுமாய் இருந்த புனித செபஸ்தியாரே, திருச்சபைக்கு விரோதம் செய்கிறவர்களுக்கு இறைவன் நன்மனதை அருளவும், இந்த நாட்டுக்கு வேண்டிய தூய குருக்களை உருவாக்கி உண்மையின் நெறியில் எங்களை நடப்பிக்கவும், இறைவனை மன்றாடுமாறு உம்மை வேண்டுகிறோம்.

-பர, அருள், திரி


6. உலக மகிமை, பெருமை, புகழ், செல்வமெல்லாம் நீத்து இயேசுநாதரைப் பின்பற்றி உயிரைத் தர ஆழ்ந்த விசுவாசத்துடனே மாற்கு, மர்செல்லியனுக்குப் புத்தி சொல்லும் போது ஏழு தேவ தூதர்களுடன் இயேசுநாதர் வந்து உம்மைத் தழுவி “நம்மோடு கூட இருப்பாய்” என்று சொல்லக் கேட்டு மகிழ்ச்சியடைந்த புனித செபஸ்தியாரே. நாங்கள் எல்லாரும் புண்ணிய வழியிலே துணிவுடன் நடந்து பேரின்ப விண்ணுலக அரசில் சேர்ந்து இறைவனோடு வாழ்வு பெறத்தக்கதாக நீரே அவரை மன்றாடும்படி உம்மை வேண்டுகிறோம்.

-பர, அருள், திரி


7. உரோமாபுரி தியோக்கிளேசியன் என்ற அரசனால் அம்புகளால் எய்யவும், சாட்டை, கசை. பெருந்தடிகளால் அடித்துக் கொல்லப்பட்டு, விண் அரசில் இறைவனால் அத்தியந்த ஜோதி மகிமையுள்ள மறைசாட்சி முடிசூட்டப்பட்டு, உமது திருவுடல் அப்போஸ்தலர்களான புனித இராயப்பர், சின்னப்பர் கல்லறைக்கருகே அடக்கமாகப் பேறுபெற்ற புனித செபஸ்தியாரே! திருச்சபையார் எல்லோரும், இறைவனுடைய திருவுளத்துக்கேற்ப நடக்கவும், எல்லா வியாதிகளிலுமிருந்து எங்களை விலக்கி இரட்சிக்கவும் உமது பரிந்துரையின் பலன் எங்களுக்கு எப்போதும் கிடைக்கவும் நீரே இறைவனை மன்றாடும்படி உம்மை வேண்டுகிறோம்.

-பர, அருள், திரி



புனித செபஸ்தியார் மன்றாட்டு மாலை

  • ஆண்டவரே இரக்கமாயிரும்..... மற்றதும்
  • மறைசாட்சிகளுக்கு அரசியாகிய புனித மரியாளே! -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
  • புனித செபஸ்தியாரே!
  • உயர்ந்த குடும்பத்தின் பிரதாப மகிமையான புனித செபஸ்தியாரே!
  • உமது பிறப்பினால் நற்பொன் என்கிற பட்டணத்தை முக்கியப்படுத்தினவரே!
  • இத்தாலி நாட்டில் அதிசயப் புண்ணியப் பேரொளியினால் விளங்கினவரே!
  • திருமறைக்காகத் துன்பப்பட்ட விசுவாசிகளுக்கு ஆதரவாயிருக்கப் படையில் சேவித்தவரே!
  • அஞ்ஞான இருளில் மெஞ்ஞானக் கதிராய்ப் பிரகாசித்தவரே!
  • வறுமையுற்றோர்க்கு உதவும் தந்தையே!
  • வேதனைகளில் தத்தளித்த மறைசாட்சிகளுக்குப் புத்திமதி சொல்லித் திடப்படுத்தி பரகதியில் சேர்ப்பித்தவரே!
  • வியப்புக்குரிய ஞானத்தோடும் துணிவோடும் மறை சத்தியங்களைப் பிரசங்கித்தவரே!
  • அநேக அற்புதங்களால் இயேசுக் கிறிஸ்துவில் கொண்டுள்ள விசுவாசத்தை விளங்கச் செய்தவரே!
  • சொல்லிலும், செயலிலும் வல்லவராயிருந்தவரே!
  • சத்தியத்துக்காக வேதனைப்பட்டவர்களுக்கு மிகுந்த தைரியத்தை வருவித்தவரே!
  • மறைசாட்சிகளுக்குத் தங்கள் வேதனைகளிலும் மரண வேளையிலும் பலமும் தேற்றரவுமாயிருந்தவரே!
  • அநேகர் வலிய மறைசாட்சிகளாவதற்கும் விண்ணுலக அரசை அடைவதற்கும் உதவியாயிருந்தவரே!
  • திடமான விசுவாசத்தினாலும் சுகிர்த ஒழுக்கத்தினாலும் யாவருக்கும் நல்ல மாதிரியாயிருந்தவரே!
  • தருமக் கண்ணாடியானவரே!
  • பக்தி நிறைந்த வாக்கியங்களால் அநேகர் இதயத்தில் தேவசிநேக அக்கினியை மூட்டி வளர்த்தவரே!
  • அநேகருக்குச் சத்தியத்தைத் தெளிவித்து ஞான தீட்சை பெறுவித்தவரே!
  • பேர்பெற்ற பெரிய அலுவலர்களையும் சத்திய திருச்சபையில் சேர்ப்பித்தவரே!
  • அதிசயமான சகல புண்ணியங்களிலும் தைரிய வீரத்திலும் அதிகரித்தவரே!
  • விசுவாசிகளுக்கு உதவியாக உரோமைப் பேரரசனிடம் சேனைத் தலைவராக தேவ கிருபையால் உயர்த்தப்பட்டவரே!
  • இறைவனுக்கும் மனிதருக்கும் மிகவும் பிரியப்பட்டவரே!
  • சத்திய திருச்சபைக்குத் தஞ்சமானவரே!
  • திருத்தந்தைக்கு மிக உகந்த ஆறுதலும் அக மகிழ்ச்சியுமாயிருந்தவரே!
  • சிலுவை அடையாளத்தால் திமிர்வாதத்தை நீக்கினவரே!
  • ஊமையைப் பேச வைத்தவரே!
  • அதிசயமாகப் பல வியாதிகளைத் தீர்த்து ஆரோக்கியம் தந்த உத்தம வைத்தியரே!
  • எண்ணவியலாத புண்ணிய நன்மை அற்புதங்களைச் செய்தவரே!
  • பிசாசுகளுக்குப் பயங்கரமான சாட்டையாய் இருந்தவரே!
  • இராணுவ முகாமிலும் சிறந்த தூய்மையுடையவராய் விளங்கினவரே!
  • ஆழ்ந்த விசுவாசத்திடனை உடையவரே!
  • இடைவிடாமல் அன்புச் சுடராக எரிந்த ஞானசூளையே!
  • உலக மகிமை, பெருமை, புகழையெல்லாம் புறக்கணித்தவரே!
  • இயேசுநாதர் மீது கொண்ட அன்பினால் பேரரசரின் நட்பையும் அவர் தந்த பதவிகளையும் இழந்தவரே!
  • இயேசுநாதரைப் பற்றிக் கொண்டு உயிரை இழக்க மிகவும் ஆசித்தவரே!
  • மெய்மையை அனுசரித்ததால் மரணத்தீர்வை இடப்பட்டவரே!
  • திரளான அம்புகளால் எய்யப்பட்டவரே!
  • அம்புகளால் ஊடுருவப்பட்டு மரித்தவராக எண்ணிவிடப்பட்டவரே உயிர் பிழைத்து மறுபடியும் அதிசய தைரியத்துடனே அரசன் முன்னிலையில் போய் அவன் கிறிஸ்தவர்களை வாதித்த அநியாய குரூரத்தைக் கண்டித்தவரே!
  • குரூரம் மாறாத அரசன் கட்டளையால் சாட்டை கசைகளையும் பெருந்தடிகளையும் கொண்டு கொல்லப்பட்டவரே!
  • எவ்வித நிர்ப்பந்தத்துக்கும் அஞ்சாத மறைசாட்சியே!
  • விசுவாசத்தில் ஒருபோதும் தத்தளியாத மறைசாட்சியே!
  • உமது இரத்தத்தால் கிறிஸ்து வேதத்தை மெய்ப்பித்த உத்தம மறைசாட்சியே!
  • மிக்க தைரிய மகிழ்ச்சியுடனே திருமறைக்காக உயிரைக் கொடுத்தவரே!
  • தரிசனையில் ஏவுதலைப் பெற்ற ஒரு புண்ணிய தலைவியால் மிகுந்த பூச்சியத்துடன் அடக்கம் பண்ணப்பட்டவரே!
  • விண்ணரசில் இறைவனால் அளவற்ற சோதி மகிமையுள்ள மறைசாட்சி முடி சூட்டப்பட்டவரே!
  • மறைசாட்சிகளுக்குள் சிறந்த மகிமைப் பிரதாபத்துடனே பிரகாசிக்கிறவரே!
  • உமது மன்றாட்டின் உதவியால் உரோமாபுரி முதலிய நகர்களினின்று கொள்ளை நோய், பெருவாரிக் காய்ச்சல் நீங்கியதால் மிகவும் பேர் பெற்றவரே!
  • உலகமெங்கும் சுகிர்த வாசம் பரிமளிக்கிற பெயர் உடையவரே!
  • எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் தயை நிறைந்த தகப்பனாக விளங்குகிறவரே!
  • வைசூரி முதலிய வியாதி துன்பத்தில் ஆதரவும் அடைக்கலமுமாயிருப்பவரே!
  • உலகின் பாவங்களைப் போக்குகிற..... மற்றதும்
  • இயேசுக் கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி.
  • புனித செபஸ்தியாரே. எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
செபிப்போமாக:
  எல்லாம் வல்ல இறைவா, வலிமை குன்றிய எங்களைக் கடைக்கண் பார்த்தருளும். பாவச் செயல்களின் சுமையை எங்களால் தாங்க முடியவில்லையாதலால், உம்முடைய மறைசாட்சியான புனித செபஸ்தியாரின் மாண்புமிக்க வேண்டுதல் எங்களைக் காத்தருள வேண்டுமென எங்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
-ஆமென்!

புனித செபஸ்தியாரின் பாடல்

பாடல்-1
உரோமை மாநகர் மணிவிளக்கே
பாரோர் பணிந்திட்டோம் பதமலரே
அன்பர் யேசுவின் வழி நடத்தி
அருள்திரு வாழ்வினில் ஆள்வாயே!

சரணம்

கொள்ளை நோய் பெருவாரி காய்ச்சல்களும்
இல்லாது காத்திடும் காவலரே
வேதனைத் துன்பம் அடைந்தவர்க்கு
சாதனை புரிந்திடும் புண்ணியரே!
பேய்பிணி நின்று எமைக் காத்திடவே
தாயென வருவாய் வரமருள்வாய் - (உரோமை.)

தீரமாய் விளங்கிய வீரரே நீர்
பரிசுத்த ஆவியின் வல்லமையால் பேரிடி
முழக்கமாய்ப் பேசினாயே
பேரிடி முழக்கமாய்ப் பேசினாயே
விசுவாச வாழ்க்கையின் கலங்கரை தீபமே
விசுவாசி எமக்கு ஒளியாய் வா - (உரோமை.)

மாயமாய் உலக வாழ்க்கையிலே
காயங்கள் பலவாய்த் துன்பங்களே
தூய உள்ளத்தை எமக்களித்தே
தூயரே வருவீர் வரம் தருவீர்
தூயர்கள் வாழும் நிரந்தர வாழ்விற்கு
சேயர்கள் எம்மையும் அழைத்துச் செல்வாய் - (உரோமை.) -

பாடல்-2
சத்தியமறை உண்மை காக்க
உயிரைத் தந்த நல் உத்தமரே
உற்சவ நாளன்று உள்ளம் மகிழ்ந்து
உம் ஆசீர் வேண்டி வந்துள்ளோம் - (சத்திய.....)

கொள்ளை நோய் வைசூரி கொடிய காய்ச்சல்
வாடிய மக்களைப் பாதுகாப்பீர்
துன்பங்கள் பிணிகள் எங்களைத்
தீண்டாமல் துரிதமாய் வந்து காப்பீர். - (சத்திய....)

விசுவாச சாட்சியங்கள்

இறைவனின் அருளால் புனித செபஸ்தியார் செய்த புதுமை

1. 2012-ஆம் ஆண்டு நெஞ்சு வலி என்று மருத்துவமனை சென்றேன். எனக்கு Mild Heart Attack என்று treatment கொடுத்தார்கள். நான் இறந்து விடுவேன் என்றும் அவ்வளவுதான் என்றும் சுற்றியுள்ளவர்களும், மருத்துவமனையும் என்னை பயமுறுத்தினார்கள். என் வாழ்க்கை முடிந்துவிட்டது கணவரையும் என் பிள்ளைகளையும் விட்டு செல்லப் போகிறேன் என்று நினைத்தேன். மருந்து, மாத்திரை, இசிஜி தினம் ஒரு போராட்டம். சென்னை விஜயா மருத்துவமனை சென்றோம். அங்கு யாரும்மா உனக்கு heart attack என்று சொன்னது உனக்கு எதுவுமில்லை என்று கூறி ரூ. 2000/- க்கு மருந்து கொடுத்தார்கள். எனக்கு சிறிது நேரம் கூட நிற்க முடியவில்லை. உடல் கடகட என்று ஆடிக் கொண்டே இருந்தது. எல்லா மருந்தையும் காலி மனையில் தூக்கி எறிய சொன்னார் என் கணவர். ஆண்டவர் உன்னை உயிருடன் இருக்க வேண்டும் என்று நினைத்தார் அவர் வைத்திருப்பார். அப்படி எடுக்க வேண்டும் என்று நினைத்தால் எடுத்து கொள்ளட்டும் என்று கூறி விட்டார்கள். ஆனாலும் தினம் காணும் திருப்பலியை விடவில்லை. மிகவும் முடியாத சூழ்நிலையில் அருட்தந்தை டைட்டஸ் வீட்டில் வந்து உன்னை திருப்பலியில் காணோமே என்று தேடி வந்தார்கள். ஆசீர்வாதம் கொடுத்தார்கள். திருப்பலிக்கு வர சொன்னார்கள். திருப்பலி பார்க்கும் பொழுது இப்பொழுது நீ இறந்து விடுவாய் என்று உள்ளூர யாரோ சொல்வது போல் உணர்ந்தேன். தொண்டைக்குழி வேக வேகமாகத் துடிக்கும். மூச்சு நிற்பது போல இருக்கும். கோவிலில் அழுது வேண்டினேன். எனக்கு இந்த துடிப்பு தாங்க முடியவில்லை அப்பா, எனக்கு உயிர் கொடுங்கள் என்று கையேந்தி வேண்டினேன். திருப்பலி முடிந்து செபஸ்தியாரின் அருளிக்கத்தை கையில் தொட்டு வேண்டினேன். உள்ளங்கையில் மூன்று முறை வெடுக் வெடுக்கென்று யாரோ இழுத்ததை உணர்ந்தேன். அதன் பிறகு அந்த துடிப்பு எனக்கு நின்றது. நான் விரைவில் குணமாகி தினமும் திருப்பலி வருகின்றேன். புனித செபஸ்தியாருக்கு சாட்சியாக இருக்கின்றேன்.
புனித செபஸ்தியாருக்குக் கோடான கோடி நன்றிகள்.
செலின், RMS காலனி.

2. ஆலயத்தில் யூபிலி ஆண்டிற்காக அனைத்து பதிவுகளையும் கணிப்பொறியில் சேமித்து வைக்க கணிப்பொறியைக் கையாளத் தெரிந்த நபர்கள் தேவை என்று பங்கு தந்தை அவர்கள் கூறினார்கள். எனவே நான் சென்று அந்த வேலை செய்து நேரத்தையும், உழைப்பையும் புனித செபஸ்தியரின் யூபிலி ஆண்டிற்காக செலவிட்டேன். நான் ஆலயத்தில் பணி செய்யத் தொடங்கியதும் ஆண்டவர் என் குடும்பத்தில் என் தேவைகளை சந்திக்க தொடங்கினார். என் கணவருக்கு வேலையில் உயர்வு மற்றும் அவரின் பணி ஓய்வு வயதை மேலும் ஐந்து வருடங்களாக நீட்டித்து கொடுத்தார். என் மூத்த மகள் மேல் படிப்பை ஆஸ்திரேலியாவில் படிக்கவும் அதற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து ஆசிர்வதித்தார். “நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரமெல்லாம், ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன”. (யாக்கோபு 1:17) என்ற இறை வார்த்தையின் படி எங்கள் குடும்பத்தை ஆசிர்வதித்த இறைவனுக்கும் எங்களுக்காக பரிந்து பேசும் புனித செபஸ்தியாருக்கும் நன்றி.
- மேரி சிந்தியா, காயிதே மில்லத் நகர்.