கடந்த 2000-ஆவது ஆண்டில் அகில உலக திருச்சபை கொண்டாடிய, இறைமகன் இயேசுவின் பிறப்பு யூபிலி ஆண்டில் இப்பங்கு உதயமானது. யூபிலி ஆண்டின் உண்மையான பொருள்: "அவரவர் தம் காணியாட்சிக்கு திரும்பி செல்லுதல்" (லேவி 25:13). நம் பங்கின் இந்த யூபிலி ஆண்டு நாம் இன்னும் அதிகமாக ஆண்டவரோடு இணைய அழைக்கிறது. காலத்தின் சாட்சியாக மிளிரும் இருபத்தைந்து ஆண்டுகள் ஒற்றுமையை வளர்ச்சியை ஆனந்தமாகக் கொண்டாடும் தருணம்.
‘பக்தி’ என்பது இறைவன் அல்லது ஓர் உயர்ந்த சக்தியின் மீது உள்ள அன்பும் ஈடுபாடும் ஆகும். பர்மாவில் தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதியில் புனித செபஸ்தியார் ஆலயம் இருந்ததாலும் செபஸ்தியார் மூலமாக அருள் வாழ்வும் நல வாழ்வும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அண்ணா நகரில் 1964-ல் இந்த செபஸ்தியார் ஆலயத்தை கூரைக் கொட்டகை போட்டுக் கட்டி செபித்து வந்தனர்.
உடல் நலக் குறைவுகள், கொள்ளை நோய்கள் தாக்கிய போதும், புனித செபஸ்தியார் மீதான பக்தியைக் கைவிடாமல் காத்து வந்தனர். செபஸ்தியார் சேவல் முறையைக் கடைபிடித்தனர். சேவலை வெட்டி, அதை சமைத்து, இந்தக் கொள்ளை நோயிலிருந்து கடவுள் நம்மை காப்பாற்றி விட்டார் என்று அவருக்கு நன்றி செலுத்தி, செபம் செய்து அந்த சேவலை உண்டனர். இந்த பக்தி, மக்கள் வாழ்க்கையில் அமைதியை, தன்னம்பிக்கையை, மற்றும் ஒற்றுமையை உருவாக்கியது.
“நம்பிக்கை என்பது பார்த்து உணர முடியாத ஒரு விசுவாசம் மனதின் ஆழத்திலிருந்து வரும் உறுதி”
மியான்மர் தமிழர்கள் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை உடையவர்கள், சிறப்பாக வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை மீது தனிப் பற்று கொண்டவர்கள். ரங்கூன் மாநகரில் அமைந்துள்ள புனித அந்தோணியார் கோவிலில் கடந்த 117 ஆண்டுகளாக ஆரோக்கிய அன்னை திருவிழா சிறப்போடு கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் கிறிஸ்தவர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் மற்ற இடங்களிலும் இது அண்மைக்காலமாக சிறப்பிக்கப்படுகிறது. இவ்விழா தமிழக கத்தோலிக்கரின் தனிப்பெரும் அடையாளமாகத் திகழ்கிறது.
“நம்பிக்கை இல்லாமல் வாழ்க்கை பயணமே சவாலாக மாறும்: நம்பிக்கை வழி காட்டும் ஒளியாக அமைகிறது”. இந்த நம்பிக்கையின் செயல்பாடாக, காலை திருப்பலியில் தவறாமல் பங்கு கொள்வது, திருச்சபையின் எல்லா ஒழுங்கு முறைகளையும் பின்பற்றுவது. மாலையில் தவறாமல் கூடி குடும்ப ஜெபமாலை சொல்வது போன்றவற்றை தொடர்ந்து கடைபிடித்து வாழ்ந்து வருகின்றனர்.
1974 ஆம் ஆண்டு கூரைக் கோவிலாக இருந்த செபஸ்தியார் ஆலயம் அகற்றப்பட்டு ஆஸ்பரோசிட்டில் அழகுமிகு சிற்றாலயமாகக் கட்டப்பட்டது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு 03-12-2000 அன்று புனித செபஸ்தியார் ஆலயத்தை தனிப்பங்காக அறிவிக்கப்பட்டது. புனித செபஸ்தியார் ஆலயம் பொதுமக்களின் நன்கொடையாலும் கட்டப்பட்டு, 28-5-2004 அன்று புதிய ஆலயமாக புனிதம் செய்யப்பட்டு மக்களின் ஆன்மீக வாழ்க்கைக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
“தாராள குணமுள்ள மக்கள், சமூகத்தில் நல்லிணக்கத்தை உருவாக்குகிறார்கள்”. புலம்பெயர்ந்து வந்த அனைவரும் சாதியைக் கடந்து-மறந்து ஒருவருக்கு ஒருவர் உதவினர். பர்மாவில் இருந்து இவர்கள் கொண்டு வந்த மிகப்பெரிய சொத்து நம்பிக்கை மட்டுமே. இதில் கிறிஸ்தவர், இந்து, முஸ்லிம் என்ற பாகுபாடு இல்லை. அங்கிருந்து வந்தவர்கள் அவரவர் தெய்வங்களுக்கு இடம் வாங்கி தங்களுக்கான ஆலயங்களையும் கோவில்களையும் மசூதிகளையும் சுட்டி இன்றளவும் மத நல்லிணக்கத்தோடும் ஒற்றுமையோடும் வாழ்ந்து வருகின்றனர்.
அன்புடன்,
அருட்திரு. முனைவர். S.செபாஸ்டின் பெரியண்ணன் பங்குதந்தை, அண்ணாநகர்
“ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம்” (தி.பா 126:3)
பர்மா என்னும் தேசத்தில், அங்கொன்றும் இங்கொன்றுமாய் மலர்ந்து மணம் பரப்பும் மலர்களைப் பாங்காய் பறித்து, பக்குவமாய் சேர்த்து, அழகிய மாலை தொடுப்பதைப் போல, பல இடங்களில் இருந்து நம்மை ஒன்றாய் சேர்த்து, புனித செபஸ்தியாரின் பாதுகாவயில் நம்மை 25 ஆண்டுகள் பராமரித்த இறைவனுக்கு நன்றி கூறுவோம், நாம் கொண்டாடும் யூபிலி ஆண்டில் நம் விசுவாசத்தில் நம்மைப் பலப்படுத்தவும், இயேசு கிறிஸ்துவை நம் வாழ்வின் மத்தியில் அடையாளம் காணவும், எதிர்நோக்கின் திருப்பயணிகளாக வாழவும் அழைக்கப்படுகிறோம்.
நாம் சோர்வடையும் சூழலில் நாம் கொண்டிருக்கும் எதிர்நோக்கு மட்டுமே நமக்கு நங்கூரமாக உதவிட முடியும். அந்த எதிர்நோக்கு என்னும் கயிற்றை மட்டுமே நாம் இறுக்கமாகப் பற்றிக் கொள்ள கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக!
அன்புடன்
அருட்திரு. A.பெஞ்சமின் ரிச்சர்டு
உதவி பங்குத்தந்தை, அண்ணாநகர்
“ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்: உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார்” திருப்பாடல் 37:4
அன்புமிக்க இறை சமூகமே! உங்கள் அனைவருக்கும் இந்த யூபிலி மலர் வாயிலாக பங்கின் 25-ஆம் ஆண்டு யூபிலி வாழ்த்துக்களை தெரிவிப்பதிலே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அண்ணா நகர் பங்கு தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை நினைத்து நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக இந்த யூபிலி விழாவை உங்களோடு இணைந்து கொண்டாடுவதில் எனக்கு மட்டில்லா மகிழ்ச்சி. உங்களுடைய ஆழ்ந்த நம்பிக்கையும் ஆழமான விசுவாசத்தையும் பார்க்கின்ற பொழுது, எந்த அளவிற்கு இறைவன் மீது நீங்கள் அளப்பரிய நம்பிக்கை வைத்துள்ளீர்கள் என்பதை என்னால் அறிந்து கொள்ள முடிகின்றது.
இந்த பங்கானது இங்குப் பணியாற்றிய அருட் தந்தையர்களாலும் மேலும் உங்கள் ஒவ்வொருவருடைய உழைப்பாலும் திறமையாலும் மிகச் சிறப்பாக கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. ஆன்மீக காரியங்களில் நீங்கள் காட்டுகின்ற ஆர்வம் அனைவரையும் வியக்க வைக்கிறது. திருச்சபையானது ஆண்டவர் இயேசு கிறிஸ்து பிறந்த 2025-ஆம் ஆண்டு யூபிலி விழாவை கொண்டாடுகின்ற இந்தத் தருணத்திலேயே நம்முடைய பங்கும் அதனுடைய பிறப்பின் 25-ஆம் ஆண்டு யூபிலி விழாவைக் கொண்டாடுவது நமது பங்கிற்கு கிடைத்த பெருமை என நான் கருதுகிறேன்.
எனவே இந்தச் சிறப்பு மிக்க ஆண்டிலே அண்ணா நகர் பங்கானது மென்மேலும் விசுவாசத்திலும் நம்பிக்கையிலும் வளர்ச்சி அடைய வேண்டுமெனவும் இறைவன் பங்கில் உள்ள அனைத்துக் குடும்பங்களையும் பங்கில் செயல்படுகின்ற கல்வி நிறுவனங்களையும் மற்றும் அனைத்து இறை மக்களையும் புனித செபஸ்தியார் வழியாக நிறைவாக ஆசீர்வதிக்கவும், மேலும் என்னுடைய ஜெபத்தோடு கூடிய வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.
அன்புடன்
அருட்திரு. J.ஜேம்ஸ் தீபன்
உதவி பங்குத்தந்தை, புதுக்கோட்டை
பங்கின் மொத்த குடும்பங்கள் - 927
ஆண்கள் - 1885 | பெண்கள் - 2290 | மொத்த கத்தோலிக்கர்கள் - 4175
| இடத்தின் பெயர் | குடும்பங்கள் |
|---|---|
| அண்ணா நகர் | 250 |
| காயிதேமில்லத் நகர் | 150 |
| கலைஞர் நகர் | 50 |
| கோரிக்குளம் (தில்லை நகரி) | 20 |
| சண்முகநாதன் நகர் | 40 |
| ரெத்தினசாமி நகர் | 22 |
| இரயில் நகர் | 25 |
| நியூ பாத்திமா நகர் | 35 |
| நாடார் காலனி | 40 |
| பாப்பா நகர் | 18 |
| ஆசிரியர் காலனி | 25 |
| ஆரோக்கிய நகர் | 37 |
| விளார் | 15 |
| பொட்டுவாச்சாவடி | 75 |
| உச்சிமாஞ்சோலை | 20 |
| கண்டிதம்பட்டு | 75 |
| நாஞ்சிக்கோட்டை | 20 |
| நெல்லுப்பட்டு | 5 |
| மடிகை | 5 |
தரவுகள்: அண்ணாநகர் பங்குத்தந்தையர் அலுவலகம், 2025